Tuesday, September 14, 2010

ஸ்பெயினின் ரபெல் நடால், முதன் முறையாக கோப்பை வென்று அசத்தினார் (யு.எஸ்., ஓபன் டென்னிஸ்)

நியூயார்க்:யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயினின் ரபெல் நடால், முதன் முறையாக கோப்பை வென்று அசத்தினார். தவிர, நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்ற ஏழாவது வீரர் என்ற புதிய சாதனையும் படைத்தார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கிராண்ட்ஸ்லாம் தொடரான யு.எஸ்., ஓபன் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பைனலுக்கு உலகின் "நம்பர்-1' வீரர் நடால், தரவரிசையில் 3வது இடத்திலிருக்கும் செர்பியாவின் டோகோவிச் இருவரும் முதன் முறையாக முன்னேறி இருந்தனர். மழை காரணமாக பைனல் ஒருநாள் தாமதமாக நடந்தது.
 

முதல் செட்டை நடால் 6-4 என கைப்பற்றினார். அடுத்த செட்டில் எழுச்சி கண்ட டோகோவிச், 7-4 என வென்று பதிலடி கொடுத்தார். ஆனால் மூன்றாவது செட்டை மீண்டும் நடால் 6-4 என வென்றார். தொடர்ந்து நடந்த நான்காவது செட்டில் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால் 6-2 என எளிதாக தனதாக்கினார். இறுதியில் நடால் 6-4, 5-7, 6-4, 6-2 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று, யு.எஸ்., ஓபன் பட்டத்தை முதன் முறையாக கைப்பற்றினார். இவர், ஆஸ்திரேலிய ஓபன் (2009), விம்பிள்டன் (2008, 2010) மற்றும் பிரெஞ்ச் ஓபன் (2005, 2006, 2007, 2008, 2010) என மொத்தம் 9 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.
தவிர, நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஏழாவது வீரர் என்ற சாதனையும் படைத்தார். இதற்கு முன், பிரட் பெர்ரி (இங்கி.,), லாவர், ராய் எமர்சன் (ஆஸி.,), டன் பட்ஜ், அகாசி (அமெரிக்கா), ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) ஆகிய 6 வீரர்கள் நான்கு பட்டங்களையும் வென்றுள்ளனர். இளம் வயதில் நான்கு கோப்பை வெல்லும் 3வது வீரர் என்ற மற்றொரு சாதனையையும் நடால் (24) படைத்தார்.

இதுகுறித்து நடால் கூறியது:யு.எஸ்., ஓபன் தொடரில் கோப்பை வெல்ல வேண்டும் என்பது எனது நீண்ட நாளைய கனவு. பைனலில் நான் எதிர்கொண்ட டோகோவிச் எப்போதும் கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்துவார். இவருக்கு எதிராக நான் பலமுறை தோல்வியடைந்துள்ளேன். இந்நிலையில் அவரை வென்றுள்ளேன். எனது டென்னிஸ் வாழ்க்கையில் இந்த போட்டியில் தான் சிறப்பாக விளையாடியதாக நினைக்கிறேன். கடந்த ஆண்டு மோசமாக அமைந்த எனக்கு, இந்த ஆண்டு சிறப்பாக இருந்தது. இதேநிலை எதிர்காலத்திலும் தொடரும் என நம்புகிறேன்.
இவ்வாறு நடால் கூறினார்.

No comments:

Post a Comment